Friday, 16 September 2011

அப்பா

ஒரு மழைக்கால இரவில் 
குளிரில் நடுங்கிய 
என் குழந்தையை 
நெஞ்சோடு
அணைத்த போது 
வந்தது
அப்பாவின் நினைவுகள்.........


எப்போதுமே எங்களை 
தோளுக்கு மேல் தான்
தூக்கி வைத்திருப்பார் அப்பா 
அவர் முதுகுக்கு பின்னால் 
மறைந்திருக்கும் உலகத்தை 
முழுசாய் நாங்கள் பார்ப்பதற்கு .....


எங்களின் 
இரவு நேர வியர்வைகள் 
அப்பா தன் கரங்களால் 
நெடுநேரம் விசிறிய 
பனைஒலையின் கைப்பிடியில் 
காய்ந்து கிடக்கிறது .....


வாழ்க்கையில் 
நாங்கள் முன்னோக்கி நடந்தோம் 
அப்பா பின்னோக்கி நடந்தார் 
காரணம் கேட்டால்
நீங்கள் முன்னால் செல்வதை 
பார்த்து மகிழ- நான் 
பின்னால் இருப்பதே நலம் என்பார் .....



அட்சயப் பாத்திரமாய் இருக்கும் 
சட்டை பையில் 
அள்ள அள்ள  
குறையாமல் இன்றுவரை 
வந்துகொண்டே இருக்கிறது 
"அப்பாவின் அன்பு "


எல்லா அப்பாக்களும் 
நல்ல அப்பாக்கலாவென்று 
எங்களுக்கு தெரியாது.....

ஆனால் 

எங்கள் அப்பா
அம்மாவாகவும் இருந்தார் ..



மணி விழா அன்று 
அப்பாவின் கைகளை 
கண்களில் ஒற்றிய போது
காணாமல் போய் இருந்தது 
கைகளின் ரேகைகள் 
உற்று நோக்கினோம் ...
.
அப்பா சொன்னார்..................

இத்தனை ஆண்டுகள் 
என் கைகளை விடாமல் 
இறுக பற்றி நடந்தீர்கள்  
அதனால் 
என் கைகளின் ரேகைகள் 
உங்கள் கைகளில் 
ஒட்டிக்கொண்டது 

அவர்தான் எங்கள் அப்பா .......







தேடல்

தேடிக்கொண்டிருக்கிறேன் 
  
சாப்பிடும் போது ....



பரோட்டா அடித்தவரின் 

கை ரேகைகளை ......





Saturday, 13 August 2011

பேச்சு

பேருந்து பயணங்களில் 


அடுத்தவர் கதையை


 நான்  பேசிக்கொண்டிருக்கையில்               


எந்த பேருந்தில் 


யார் பேசிக்கொண்டிருக்கிறார்களோ


 
  என்னோட கதையை...

Thursday, 16 June 2011

ஈரம்

கொய்யா பழத்தை கொத்த

கிளிகள் வரவில்லை





காய்ந்து கிடக்கிறது

உதடுகள்.........

Monday, 13 June 2011

என்னுள்ளே

அமர்ந்துகொண்டாய்.....



வலிக்கிறது                                                   

என் இதயம்.......





எப்போது இறங்குவாய் நீ?

முரண்

குழந்தை

பலூன்  வூதும்போது
                                                                           
இல்லாத பயம்

நான் வூதும்போது

வந்துவிடுகிறது.


எங்கே வூதும்போதே

அது

வெடித்துவிடுமொவென்று......

சாரல்

என் கண்களில்

வடிந்தது கண்ணீர்..........

                                                                                


உன் கண்கள்

வற்றிப்போனது...............

இனி

எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று

ஆசைப்பட்டோம் .


                                                                                     

இப்போது

என்னை மறந்து நீயும்...........


உன்னை மறந்து

நானும்..............


Monday, 2 May 2011

அம்மா


உன் முகத்தின் அழகும்

தெற்றுபல் சிரிப்பும்

என் பெயரை உச்சரிக்கும் தொனியும்

என் மேல் நீ கொண்ட அன்பும்


இதுவரை நான்

யாரிடமும் கண்டதில்லை.



அம்மா

உன்னை நினைக்கும்போதெல்லாம்

எனக்கு அழுகையாய்  வருகிறது .



மீண்டும் எழுந்து வரமாட்டாயா நீ







Thursday, 28 April 2011

நாங்கல்லாம்

நான் சொல்றத கவனமா கேளு கோவாலு.


பித்து பிடிச்சி போய்               

நீ சுத்தர விஷயம்

எனக்கு தெரிஞ்சு போச்சு.


எப்படா வரும் எலெக்சன் ரிசல்டுன்னு

எல்லார் வாயையும்

கேசரி கணக்கா கிண்டிகிட்டு வர


காமடியன் ஹீரோவானதையும்

ஹீரோ காமடியானனதையும்

பார்த்த பிறகும் உனக்கு புத்தி வரல .


கனிமொழிய உள்ள தள்ளிடுவாங்கலா

ராஜபக்சாவ தூக்குல மாட்டிடுவாங்கலான்னு

போறவன் காதுல குச்சி விட்டு நோண்டற .


இலைக்கு  எத்தன சீட்டு

சூரியனுக்கு எத்தன வேட்டுன்னு

கர வேட்டிய பார்த்தாலே கதறி அழுவுறே


வேனான்டா கோவாலு


அம்மா கொடநாடு போயாச்சு

ஐயா டெல்லி போறாரு

விஜயகாந்தும்,வடிவேலுவும்

கூத்து கட்ட  போய்ட்டாங்க

கம்யூனிஸ்ட்காரன் ஆளையே காணோம்

வைகோவ பத்தி கேக்காதே


எவன் எப்படி போனா உனக்கு என்னடா கோவாலு


இருக்கவே இருக்கு டாஸ்மாக்கு

போனியா குவாட்டரு வாங்கினியா

ஊத்திட்டு குப்புற படுத்து தூங்குடா .



நீ உன் பொண்டாட்டிகிட்ட அடிவாங்குரத பார்த்து

ரொம்ப நாலு  ஆச்சுடா கோவாலு .
















Thursday, 21 April 2011

புளியாத அப்பமும்,பாஸ்காவும்

அவர் அறையப்பட்டதால்

ஆணிகளின் கூர் அறியப்பட்டது .                  

*

அவர் உயிர் விட்டதால்

சாதா மரம் சாகா வரம் பெற்றது

*

அவர் புதைக்கப்பட்டதால்

கல்லறை குழி கூட  கருவறையானது

*

அவர் உயிர்த்தெழுந்ததால்

இறப்பின் உண்மை பொய்த்துப்போனது

*

ஆனாலும்-

எங்கள் மத்தியில்

இயேசு எப்படி  உயிர்ப்பார்

என்று தெரியவில்லை.


இரண்டுபட்டுக் கிடக்கிறது 

எங்கள் ஊர் கல்லறை...


































Sunday, 17 April 2011

ஆதலினால்

ஒரு பேருந்து பயண நெரிசலில்

கண்டக்டரின் வசவுச் சொல்லுக்கு பயந்து

என் அருகில் வந்து நின்றாய் நீ .

*                                                                                                              

ஜன்னல்கள்  மூடி  இருந்த  பேருந்தில்

என் இதயத்திற்கான கதவை

திறந்துவிட்டாய்  நீ.

*

அலைபாய்ந்த உன் கேசத்தின் நுனி முனை கீறிச் சென்றது

என் விழித்திரையில் தொக்கி நின்ற

உன் தரிசனத்திற்கான  பிம்பத்தை.

*

கிழித்து கொடுக்கப்பட்ட  டிக்கட்டினுள்

என்னையும் சேர்த்து

பத்திரபடுத்திக் கொண்டாய் நீ.

*

யாரேனும்  என்னை சந்தேகிக்கிறார்களோ 

என்று எண்ணுகிற வேளையில்

என்னை சந்தேகித்தாய் நீ

அடுத்த நிறுத்தத்தில் நான்  இறங்கி விடுவேனோவென்று .

*

நீ நின்றுகொண்டிருப்பதை பார்த்து

என் மனம் வலிக்கும் வேலையில்

சொல்லாமலே இறங்கிச்  சென்றாய்

அழுத்தமாய் என் கால்களை மிதித்தபடி.

*

வலிக்கிறது எனக்கு.

எந்தக்  கடையில் செருப்பு வாங்குகிறாய் நீ?

Tuesday, 5 April 2011

நண்பர்களைத் தேடி

அடிக்கடி என்னைத் தேடி

வருவார்கள்  நண்பர்கள் .


வரும்போதெல்லாம்

அவர் வீட்டிலில்லை

என்ற பதில்

மனைவியிடமிருந்து  வரும்.


ஏமாற்றத்துடன் திரும்பினோம்

பதில் வரும் நண்பர்களிடமிருந்து .


நாங்கள் வரும்போதெல்லாம்

நீ ஏன் இருப்பதில்லை வீட்டில்?

எங்கு சுற்றித் திரிகிறாய் ?

கோபம் தாங்கிய கேள்விகள்

மீண்டும் வரும்

நண்பர்களிடமிருந்து


என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்

என்னைத் தேடி

நீங்கள் வரும் வேளையில்

வெளியில் சுற்றித் திரிகிறேன் நான் -


என்  நண்பர்களைத் தேடி ... 



  







Tuesday, 29 March 2011

மகரந்த சேர்க்கையில்

புதைந்து கிடக்கும்

ஒரு புதிய

வரவிற்கான விருட்சம்.



தேனீக்களின் சத்தத்தில்

உருவாகின்றது

பல ஆயிரம் சந்ததிகளின்

வம்சத்திற்கான வரவுகள்.



பச்சைக் கிளிகள்

பழம் கொத்தும் சத்தத்தில்

பறந்து செல்கிறது

குருவிகூட்டின் பிஞ்சுகள்.



அடைகாத்தலின் வெம்மையில்

உடைந்து கிடக்கிறது

கோழிக் குஞ்சுகளின் ஓடுகள்.



விழுந்து கிடக்கும்

கன்றின் ஈரத்தில்

சுரந்து கொண்டிருக்கிறது

பசுவின் பால்.



உன்னில் என்னை

தொலைத்துவிட்டதில்

எஞ்சிக் கிடக்கிறது.....


நம் குழந்தையின்

அழுகைக்கான  சத்தம். 
















Saturday, 26 March 2011

அங்கும் இங்கும்

ஒரு திருமண வைபவத்தில்

உன்னைப் பார்த்தேன்.



மின்மினிப் பூச்சிகள்

ஒன்று சேர்ந்து

மின்னலை விரட்டுவது போல இருந்தது

உன் இமைகள் துடித்த அழகு.



செம்பருத்தி பூவின்

இதழாய் இருந்தது

உன் உதட்டில் தெறித்து விழுந்த

புன்னகையின் சிதறல்கள்.



வசந்த கால காற்றில் அசையும்

அரசமர இலைகளைப்  போல

கலைந்து பறக்கிறது

உன் தலைமுடி

சுழலும் மின்விசிறியில்.



கால் பந்தாட்ட வீரர்கள்

பந்தை நோக்கி

அங்கும் இங்கும் ஓடுவதைப் போல

ஓடிக்கொண்டிருக்கிறாய் நீ

உன் கால்களின்

கொலுசுச் சத்தம் ஒலித்தபடி.




 பெயர் கேட்கலாம் என்று

உன் அருகே வரும் வேளையில்

ஓடிச் சென்று

அமர்ந்து கொண்டாய்

உன் அம்மாவின் மடியில்.




என் மகளாக

இருந்திருக்கக்கூடாதா

நீ ...




Friday, 25 March 2011

பயணம்

அவரவர்களுக்கான பாடலை

அவரவர்களுக்கான செல்போனில்

கேட்டபடி

பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.


பேருந்திலும் 

ஒலித்துகொண்டிருக்கிறது பாடல்.


ஒருவேளை அது

அவர்களுக்கான பாடலாகவும்  

இருக்கக் கூடும்.

Wednesday, 23 March 2011

நிலவின் நிழலில்

ஒரு கோடை கால இரவில்

நிலவின் நிழலில்

நாம் ஒன்றாக

அமர்ந்திருந்தோம்.



 
நெடிந்து ஓங்கி வளர்ந்த

பனைமர இலையின்

விலிம்பை கிழித்துகொண்டு

வந்து விழும்

நிலவின் முகத்தை

சாட்சியாய் வைத்துக்கொண்டு

என் விரல்களை லேசாக

வருடியபடி இருந்தாய் நீ.



இறுக்கத்தின் புழுக்கத்தில்

வழிந்து வந்த

வியர்வையின் வாசம்

தென்னங்கீற்றுகளின் ஓசையில் 

ஒளிந்துகொண்டு அசைகையில்

என் கைகளை

இறுகப் பற்றிகொண்டிருந்தாய் நீ.



 
அனைவரும் தூங்கிவிட்டார்கள்

என்பதை

நாய்களின் மௌனம்

உணர்த்திய வேளையில்

என் மடி மீது

தலை வைத்து

படுக்க ஆரம்பித்தாய் நீ.



 
என் விரல்கள்

உன் தலை முடியை

கோதி விடும் வேளையில்

உடைந்து போன

என் நகத்தின் இடுக்கில் மாட்டியதால்

உண்டான ஓசையில்

கலைந்து போனது

நம் விடியலுக்கான வெளிச்சம்.



 
பேசாமல் இருந்திருக்கலாமோ

என்கிற வேளையில்

ஊர் கூடிப் பேசிற்று

நம்மைப் பற்றியும்

நம்மில் உண்டான

உறவு பற்றியும்.



 
இப்போதும்

வந்து போகிறது

கோடை கால  நிலா.


 

நீ தான் இல்லை

என்னோடு..........




Tuesday, 22 March 2011

எனக்கான நாட்கள்.

ஒரு அதிகாலைப் பொழுது புலர்வதில் ஆரம்பமாகிறது

உன் முகம் காணும் தரிசனத்திற்கான ஆவல்.

நினைவுகளின் சுழற்சியில்

பின்னோக்கி நகர்கிறது எனக்கான நாட்கள்.


நீ நடந்து வந்த பாதையின் ஒலிகளில் 

புதைந்து கொண்டது 

என் கால்களின் பெருவிரல் ரேகைகள்.



உன் விழிகளின் மௌனத்தில்

மறைந்து கொண்டது என்    

பார்வைக்கான  அர்த்தங்கள்.



 
நீ சூடி வந்த பூக்களின் வாசத்தில்

தொலைந்து போனது என் 

சுவாசத்தின் வாசங்கள்.



 
ஒரு பேருந்து பயணத்தின் போது

கூட்ட நெரிசலின் நடுவே 

என்னிடம் நீ கொடுத்த புத்தகத்தின் 

கிழிந்து போன பக்கத்தின் துண்டுச் சீட்டு 

இன்னமும்  ஒட்டப்பட்டுள்ளது

என் இதயத்தின் ஓரமாய்.



 

இத்தனைக்கு நடுவிலும் என்னை  

கடந்து போகிறாய் நீ

எதுவும் தெரியாமல்.




 
சொல்லாமல் போன என் காதல்

கசங்கிக்  கிடக்கிறது 

முடிந்து போன உன்

திருமண அழைப்பிதழில்.




Monday, 21 March 2011

அப்பாவின் தம்பிகள்

அடிக்கடி வந்து போவார்கள்

அப்பாவின் தம்பிகள் .


 
அவர்களின் வருகை கண்டதும்

வண்ணத்து பூச்சியின் படபடப்பு

அப்பாவின் கண்களில் காணக் கிடைக்கும் .


 
குழந்தைகள் ஒன்று கூடி

கும்மாளமிடும் மகிழ்ச்சியை போன்று

அப்பா தம்பிகளுடன் பேசி 

தனக்கான உலகத்தில் லயித்திருப்பார் .


 
பந்தை பார்க்காமலே எம்பிக் குதிக்கும் 

கிரிக்கெட் ரசிகனைப் போல 

சில சமயங்களில்-

சந்தோஷ தருணங்கள் விண்ணைப் பிளக்கும் .


 
ஏன்? எதற்கு? என்று கேட்காமலேயே

வாரி வழங்கும் அப்பாவின் குணம்

எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்-

அம்மாவைத் தவிர .


 
மனம் கோணும் அம்மாவின் முணுமுணுப்பில்  

அப்பாவின் வார்த்தைகள் தணலாய் தெறித்து விழும்.

எனக்குப் பிறகு 

என் தம்பிகள் பார்த்துக்கொள்வார்கள்.


 

இப்போதும் வந்து போகிறார்கள்

அடிக்கடி

அப்பாவின் தம்பிகள்.

மிச்சமிருக்கும் பணத்திற்கும்

சொச்சமிருக்கும்  நிலத்திற்கும்.



 
வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அம்மா

அப்பாவின் நினைவுகளோடு .............

Friday, 18 March 2011

நீயும் நானும்

இப்படித்தான் இருந்தது நம்மில் உண்டான உறவு .

நிலவு பூமிக்கு நெருங்கி வருவதனால்

உண்டாகும் பயத்தைப் போல

அணு உலை சிதறி வெளியிடும் கதிர் வீச்சை

சுவாசிக்க பிடிக்காமல்அரண்டு ஓடுவதைப்  போல

பூமி அதிர்வில் மிரண்டு  சுனாமியின்

கோரத்தில் சிக்கி தவிப்பதைப் போல

முடிந்து போன கோரத்தில்

முகம் காணத் துடிப்பதைப் போல

இப்படித்தான் இருந்தது நம்மில் உண்டான உறவு .

ஆனாலும் ,

அடிக்கடி வந்து தொலைகிறது ஒரு  பயம்

நீயும் நானும் ஒன்று சேர்ந்து விடுவோமா என்று .

Thursday, 17 March 2011

முத்தம்

அழுத்தமாய் நெற்றியில் ஒரு முத்தம் 

அப்படியே இரு கண்களின் மேலும்

குழி விழும் இரு கன்னங்களிலும்

செக்கச்சிவந்த உதட்டோடும்

மாறி மாறி இட்டுக்கொண்டிருந்தேன் முத்தம்...


மார்பில் செல்லமாய் சிணுங்கிய என்

குழந்தைக்கு.

Wednesday, 16 March 2011

மகள்

எனக்கும் என் மகளுக்கும் உள்ள உறவு

எனக்கும் என் அம்மாவிற்கும்  உள்ள  உறவு போன்றது .

நான் கருவில் என் அம்மாவை எட்டி உதைத்தேன்

இன்று என் மகள்

என் மனைவி கருவில் இருந்து வந்தவுடன் என்னை உதைக்கிறாள் .