அடிக்கடி வந்து போவார்கள்
அப்பாவின் தம்பிகள் .
அவர்களின் வருகை கண்டதும்
வண்ணத்து பூச்சியின் படபடப்பு
அப்பாவின் கண்களில் காணக் கிடைக்கும் .
குழந்தைகள் ஒன்று கூடி
கும்மாளமிடும் மகிழ்ச்சியை போன்று
அப்பா தம்பிகளுடன் பேசி
தனக்கான உலகத்தில் லயித்திருப்பார் .
பந்தை பார்க்காமலே எம்பிக் குதிக்கும்
கிரிக்கெட் ரசிகனைப் போல
சில சமயங்களில்-
சந்தோஷ தருணங்கள் விண்ணைப் பிளக்கும் .
ஏன்? எதற்கு? என்று கேட்காமலேயே
வாரி வழங்கும் அப்பாவின் குணம்
எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்-
அம்மாவைத் தவிர .
மனம் கோணும் அம்மாவின் முணுமுணுப்பில்
அப்பாவின் வார்த்தைகள் தணலாய் தெறித்து விழும்.
எனக்குப் பிறகு
என் தம்பிகள் பார்த்துக்கொள்வார்கள்.
இப்போதும் வந்து போகிறார்கள்
அடிக்கடி
அப்பாவின் தம்பிகள்.
மிச்சமிருக்கும் பணத்திற்கும்
சொச்சமிருக்கும் நிலத்திற்கும்.
வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அம்மா
அப்பாவின் நினைவுகளோடு .............
Ah this one which we read in our college.Nice sir and its a true one too....
ReplyDelete