ஒரு அதிகாலைப் பொழுது புலர்வதில் ஆரம்பமாகிறது
உன் முகம் காணும் தரிசனத்திற்கான ஆவல்.
நினைவுகளின் சுழற்சியில்
பின்னோக்கி நகர்கிறது எனக்கான நாட்கள்.
நீ நடந்து வந்த பாதையின் ஒலிகளில்
புதைந்து கொண்டது
என் கால்களின் பெருவிரல் ரேகைகள்.
உன் விழிகளின் மௌனத்தில்
மறைந்து கொண்டது என்
பார்வைக்கான அர்த்தங்கள்.
நீ சூடி வந்த பூக்களின் வாசத்தில்
தொலைந்து போனது என்
சுவாசத்தின் வாசங்கள்.
ஒரு பேருந்து பயணத்தின் போது
கூட்ட நெரிசலின் நடுவே
என்னிடம் நீ கொடுத்த புத்தகத்தின்
கிழிந்து போன பக்கத்தின் துண்டுச் சீட்டு
இன்னமும் ஒட்டப்பட்டுள்ளது
என் இதயத்தின் ஓரமாய்.
இத்தனைக்கு நடுவிலும் என்னை
கடந்து போகிறாய் நீ
எதுவும் தெரியாமல்.
சொல்லாமல் போன என் காதல்
கசங்கிக் கிடக்கிறது
முடிந்து போன உன்
திருமண அழைப்பிதழில்.
No comments:
Post a Comment