Saturday, 26 March 2011

அங்கும் இங்கும்

ஒரு திருமண வைபவத்தில்

உன்னைப் பார்த்தேன்.



மின்மினிப் பூச்சிகள்

ஒன்று சேர்ந்து

மின்னலை விரட்டுவது போல இருந்தது

உன் இமைகள் துடித்த அழகு.



செம்பருத்தி பூவின்

இதழாய் இருந்தது

உன் உதட்டில் தெறித்து விழுந்த

புன்னகையின் சிதறல்கள்.



வசந்த கால காற்றில் அசையும்

அரசமர இலைகளைப்  போல

கலைந்து பறக்கிறது

உன் தலைமுடி

சுழலும் மின்விசிறியில்.



கால் பந்தாட்ட வீரர்கள்

பந்தை நோக்கி

அங்கும் இங்கும் ஓடுவதைப் போல

ஓடிக்கொண்டிருக்கிறாய் நீ

உன் கால்களின்

கொலுசுச் சத்தம் ஒலித்தபடி.




 பெயர் கேட்கலாம் என்று

உன் அருகே வரும் வேளையில்

ஓடிச் சென்று

அமர்ந்து கொண்டாய்

உன் அம்மாவின் மடியில்.




என் மகளாக

இருந்திருக்கக்கூடாதா

நீ ...




1 comment:

  1. உங்கள் புதிய பதிவுகளை http://thiratti.com, http://tamilmanam.net, http://www.tamilveli.com, http://tamil.blogkut.com என்ற தளங்களில் பதிவிட்டால் உலகத் தமிழர்கள் அனைவரும் படிக்க இயலும்.

    ReplyDelete